ரபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பு… சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு…!!
ரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழக (சிபிஐ) இயக்குநர் உட்பட விடுப்பில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மத்திய அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.
புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப் அரங்கத்தில் புதனன்று, ரஃபேல் ஊழல் மீதான பொது விசாரணை இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் நடைபெற்றது. இந்த விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் முதலானவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மேற்கொள்வதைத் தடுக்கவே, அதன் அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். மோடிக்கு வேண்டப்பட்ட அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கில் சிபிஐ இயக்குநரைச் சட்டவிரோதமாக நீக்கியுள்ளார்கள். ரஃபேல் ஊழல் குறித்து அவர் தீவிரமானமுறையில் விசாரணையை மேற்கொண்டு வந்ததால்தான், திடீரென்று நள்ளிரவில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலோக் வர்மா மீதான நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் காட்டவேண்டும் என்பதற்காக, நாட்டின் பாதுகாப்புடன் எப்படியெல்லாம் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது இப்போது தெள்ளத்தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களும், அது தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளிகளுக்குச் சலுகைகள் காட்டுவதும் பிரிக்க முடியாதவைகளாகும்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
dinasuvadu.com