ரஃபேல் நிறுவன விசிட் எதற்காக..?நிர்மலா சீதாராமன் பதில்..!!
இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்
இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணித்தின் போது அவர் ரஃபேல் நிறுவனத்தின் ஃபேக்டரிக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தப் பயணம் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று பாரீஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ‘ரஃபேல் ஒப்பந்தம் என்பது இரு அரசுகளுக்கு மத்தியில் கையெழுத்தான ஒன்று. இந்தியாவில் முதலீடு செய்வது என்பது தான் ஒப்பந்தத்தின்படி கட்டாயம். எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
டசால்ட் நிறுவனத்தை நேரில் வந்துப் பார்க்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் இந்தியா, டசால்ட் நிறுவனத்திடம் விமானம் வாங்குவதால், அது குறித்து தெரிந்து கொள்ள நேரில் வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
நேற்று ரஃபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக ‘மீடியாபார்ட்’ என்கின்ற பிரஞ்சு புலனாய்வு பத்திரிகை, டசால்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது.
மீடியாபார்ட் அறிக்கை, தேசிய அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ‘தற்போது வெளி வந்திருக்கும் அறிக்கையை வைத்துப் பார்த்தால், பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி என்பது தெளிவாக புரிகிறது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி. ஆனால், அவரின் நோக்கம் ஊழலுக்கு எதிராக போராடுவதாம். அவர் உங்களின் பிரதமர் அல்ல. அவர் அனில் அம்பானியின் பிரதமர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
DINASUVADU