மு.க.ஸ்டாலின்-டி.டி.வி.தினகரன் சந்திப்பு…துரைமுருகன் கேள்வி…!!
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்தபோது அரசியல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதே?
பதில்:- தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா?. ஓட்டலில் கூட தங்கக்கூடாதா?. உடனே சதியா?, வேடிக்கையாக இருக்கிறது. கற்பனையாக எதையும் சொல்லக்கூடாது.
கேள்வி:- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 18 தொகுதியில் சில தொகுதிகளில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இப்போது மீண்டும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா? ம.தி.மு.க. புதிதாக உங்களிடம் வந்துள்ளதே அந்த கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா?.
பதில்:- முதலில் தேர்தல் வருகிறதா? என்று பாருங்கள். தேர்தல் வந்ததற்கு பிறகு உட்கார்ந்து பேசுவோம். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்பதை எங்களுடன் கூடி பேசி தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவை அறிவிப்பார்.
கேள்வி:- இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?
பதில்:- மழை கொட்டோ கொட்டும் என்று சொன்னார்கள். மழையே வரவில்லை. நான் எப்படி தேர்தல் வரும், வராது என சொல்ல முடியும். வானிலை அறிக்கையே பொய்த்து போகிறது.
கேள்வி:- டெங்கு, சிக்குன் குனியா 100 சதவீதம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் இருந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
பதில்:- எங்கள் ஆட்சியில் டெங்கும் தெரியாது, பங்கும் தெரியாது. வருடத்துக்கு ஒரு முறை வரும் டெங்கு இப்போது விதவிதமாக வருகிறது. எலி காய்ச்சல் முதல் எல்லா காய்ச்சலும் இவர்கள் ஆட்சி காலத்தில் தான் வருகிறது. அரசியல் காய்ச்சல் இவர்களுக்கு வந்ததால் இந்த காய்ச்சல் எல்லாம் வருகிறது.
கேள்வி:- எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தூய்மைப்பணி, ஆய்வு போன்றவற்றை நடத்துவதாக அமைச்சர்கள் குறை கூறுகிறார்களே?
பதில்:- நில வேம்பு கசாயம் கொடுப்பது நல்லது தான். அதை வரவேற்க வேண்டியது தான். அரசாங்கம் செய்ய முடியாததை தானே நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com