"மலேசியாவிலும் ஆதார் சிஸ்டம்"அமல்படுத்த மலேசிய அரசு முடிவு..!!
மலேசியாவிலும் ஆதார் சிஸ்டத்தை கொண்டு வர அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது. வங்கிக்கணக்கு, செல்போன் எண், பான் கார்டு என சகலத்துக்கும் ஆதார் எண் கேட்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, ஆதார் சட்ட ரீதியாக செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்தியாவின் ஆதார் முறையை பின்பற்றுவதற்கு மலேசிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு சென்ற போது, ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமது ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் குலசேகரன் தலைமையிலான குழு அந்நாட்டு உயரதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்தது.இந்த குழுவினர் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தி, மலேசியாவில் ஆதார் முறையை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கேட்டறிந்தனர்.
இதுகுறித்து மலேசிய மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறுகையில், “ஆதார் முறையை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை நாங்கள் சந்தித்து பேசினோம். எங்கள் நாட்டில் ஆதாருக்கு பதிலாக மைகாட் (MyKad) முறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனை நடைமுறைப்படுத்தினால் போலிகள் ஒழிக்கப்பட்டு அரசுக்கு செலவு மிச்சமாகும். இப்போது பெட்ரோல், டீசலுக்காக மக்களுக்கு மானியம் வழங்கி வருகிறோம். இதில் போலிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மானியம் செக் அல்லது நேரடி பணமாக வழங்கப்படுகிறது. ஆதார் போன்றதொரு முறையை எங்கள் நாட்டில் கொண்டு வந்தால், பயனாளர்களின் நேரடி வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்படும். எரிபொருளை தவிர்த்து, குறைந்த வருமானம் உடையவர்கள், பிள்ளைகள் இல்லாத தாய் உள்ளிட்டோருக்கும் மலேசிய அரசு மானியம் அளித்து வருகிறது என்றார்.
DINASUVADU