பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க 50 நாடுகள் முடிவு! ஐ.நா. சபை தகவல்..!
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 50 நாடுகள் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க முன் வந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டை தடுக்க பல்வேறு நாடுகள் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன என ஐ.நா. தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக வளரும் நாடுகளில் பிளாஸ்டிக் பைகளால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் பைகளை உண்ணும் கால்நடைகளும் அதிகமாக உயிரிழந்து வருகின்றன என ஐ.நா. தெரிவிக்கிறது.
இதையடுத்து பிளாஸ்டிக் குப்பைகளை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போட்ஸ்வானா, காம்பியா, சீனா, வங்கதேசம், இலங்கை, வியட்நாம், அயர்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி விதிப்பது மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது என்பது போன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.