பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி – மார்கல் திருமணத்தில் உதட்டை வைத்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள்!
லண்டனில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான செய்தியை சேகரிக்க உலகம் முழுவதும் இருந்து செய்தியாளர்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர்.
இளவரசர் ஹாரியின் அருகே நின்று செய்தி சேகரிப்பது கடினம். எனவே ஹாரியும் மெகன் மார்கலும் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய செவித் திறன் குன்றியோருக்கு கல்வி கற்பிக்க பின்பற்றப்படும் ‘லிப் ரீடிங்’ (உதட்டு அசைவு) முறையை முன்னணி ஊடகங்கள் பயன்படுத்தின.
இதற்காக பல்வேறு ஊடகங்கள் தரப்பில் ‘லிப் ரீடர்’ நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஹாரியும் மெகன் மார்கலும் என்ன பேசினர் என்பதை அப்படியே பதிவு செய்தனர்.
‘எக்ஸ்பிரஸ்’ ஊடகத்தின் லிப் ரீடர் நிபுணர், புதுமண தம்பதியின் உதட்டு அசைவுகளை உன்னிப்பாக கண்காணித்து செய்தி சேகரித்தார். அவரது வர்ணனையின் சுருக்கம்: ‘நீ (மெகன் மார்கல்) மிகவும் அழகாக இருக்கிறாய்’ என்று ஹாரி கூறினார். அதற்கு மார்கல், ‘நன்றி’ என்று புன்னகைத்தார். திருமணம் முடிந்து வெளியே வந்ததும், ‘இப்போதே உற்சாக பானம் அருந்த வேண்டும் போல் இருக்கிறது’ என்று ஹாரி கூறினார். தம்பதியரை நேரில் பார்க்க குழுமியிருந்த மக்களை பார்த்து பூரித்த மெகன் மார்கல், ‘என் கண்களால் நம்ப முடியவில்லை’ என்றார்.
இவ்வாறு ‘எக்ஸ்பிரஸ்’ ஊடகத்தின் லிப் ரீடர் நிபுணர், புதுமண தம்பதியரின் உரையாடலை பதிவு செய்துள்ளார். டெலிகிராப் ஊடகத்தின் லிப் ரீடரும் இதே கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.
ஸ்கை நியூஸ் தரப்பு ‘லிப் ரீடர்’ நிபுணர், இளவரசர் ஹாரியும் அவரது அண்ணன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையில் ஒன்றாக நடந்து வந்தபோது அவர்களின் உதட்டு அசைவை கண்காணித்து செய்தி எழுதியுள்ளார். அவரது பதிவுகளின் சுருக்கம்: இளவரசர் ஹாரி கூறியபோது ‘எனது பேன்ட் மிகவும் இறுக்கமாக உள்ளது’ என்றார். அதற்கு இளவரசர் வில்லியம் மென்மையாக புன்னகைத்தார். ‘அவள் (மெகன் மார்கல்) வந்துவிட்டாளா’ என்று ஹாரி கேட்க, ‘இல்லை’ என்று பதிலளித்தார் வில்லியம்.
இதேபோல பல்வேறு ஊடகங்கள் லிப் ரீடர்களை பயன்படுத்தி திருமண விழாவில் செய்தி சேகரித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.