பின் வாங்கிய உயர்நீதி மன்றம்!மெரினாவில் போராட்டம் நடத்த மீண்டும் தடை!
உயர்நீதிமன்றம்,சென்னை மெரினா கடற்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்க போலீசாருக்கு உத்தரவிடுமாறு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதன் மீதான விசாரணை முடிந்து சனிக்கிழமையன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா, மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை கோரி, தமிழக அரசின் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், ஒரு நாள் போராட்டத்துக்கு தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். சென்னையில் போராட்டம் நடத்த தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள வள்ளுவர் கோட்டம், சேத்துப்பட்டு, காயிதே மில்லத் கல்லூரி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும், மனுதாரர் விரும்பினால் அதற்காக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.