பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் நாடு முழுவதும் விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு…!
டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைச்சகம், நாடு முழுவதுமுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் புத்தாண்டு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் ஆதரவாளர்கள் பல நாடுகளில் மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வருடம் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்கள் மீது வாகனங்களை ஏற்றியும், கூட்டங்களில், கண்மூடித்தனமாக சுடவும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதுமுள்ள அனைத்து விமான நிலைங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள், வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…
sources: dinasuvadu.com