பலபகுதிகளில் ஜெ.ஜெயலலிதா_வின் இரண்டாம் ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…!!
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய, தமிழகத்தின் இரும்பு பெண்மணி “அம்மா ” அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. உணர்ச்சிகரமான இந்நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் அவரது நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் அனைவரும் மண்டியிட்டு தங்கள் அஞ்சலியை செலுத்தியதோடு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை வாலாஜா சாலை முதல் தொடங்கிய இந்த அமைதி ஊர்வலத்தில் முதல்வர் உட்பட லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் பங்கேற்றனர். அம்மா நினைவிடத்தை அடைந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் நினைவு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்பின் 2 நிமிட மௌன அஞ்சலி அம்மாவிற்கு செலுத்தப்பட்டது.உறுதிமொழியை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படிக்க, அமைச்சர்களும், தொண்டர்களும், மக்களும் வழி மொழிந்தனர். நடைபெற இருக்கும் தேர்தல்களில் அயராது உழைத்து வெற்றி பெற்று, வெற்றி மலர்களை அம்மாவிற்கு காணிக்கை செய்யப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.கட்சி வேறுபாடுயின்றி, தலைவர்கள் பலரும் மறைந்த முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.
திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 15 அடியில் ஜெயலலிதாவின் உருவப்படம்
திருச்சி மாநகர மாவட்ட கழகம் சார்பில் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 15 அடியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு உடையணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் அவரது திருவருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதிமுக சார்பில் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களுக்கு அன்னதானம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழிங்கநல்லூரை அடுத்த பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு சோழிங்க நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பெண்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
DINASUVADU.COM