பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு.! சீனாவுக்கு பின்னடைவு ?
தென் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை நிலம் மற்றும் கடல் பாதைகளால் ஒருங்கிணைத்து ‘பி.ஆர்.ஐ.’ என்னும் பட்டுப்பாதை திட்டத்தை சீனா நிறைவேற்ற உள்ளது.
அனைத்து நாடுகளுக்கும் பயன் அளிக்கும் திட்டம் இது என்று சீனா கூறினாலும், ஆசிய பிராந்தியத்தில் அந்த நாடு தன் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கத்தில்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக இந்தியா கருதி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனா சுமார் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக சீனாவில் கிங்தாவோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் 2-ம் நாள் நிறைவில் ஒரு பிரகடனம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய பிற நாடுகள் ஒப்புதல் வழங்கி ஆதரவு தெரிவித்த போதும் இந்தியா ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது.
இது தொடர்பாக மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்த ஒரு மெகா இணைப்பு திட்டமும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும், இதையெல்லாம் உள்ளடக்கிய முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கும்” என குறிப்பிட்டார்.