நாளை பூமியை நெருங்குகிறது மீண்டும் ஒரு விண்கல்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருக்கிறது.
15 முதல் 40 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த சிறிய விண்கல், பூமிக்கு 64,000 கி.மீ. தொலைவில் வரும் சனிக்கிழமை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2018 சிபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல் பூமியைக் கடந்து செல்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
முன்னதாக, பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றி வரும் நடுத்தர அளவு கொண்ட 2018 சிசி என்ற விண்கல், வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 15 முதல் 30 மீட்டர் வரை அளவு கொண்ட அந்த விண்கல், 1.84 லட்சம் கி.மீ. தொலைவில் பூமியை கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரமாகக் கடந்து சென்றது.