நாளைய தினம் இதுவா?
உலகில் உள்ள மக்கள் அதிக அளவில் புகைபிடிப்பதாலும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஆண்டுக்கு 35 லட்சம்பேர் மரணத்தை தழுவுகின்றனர். மனித இறப்புகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
இதை தவிர்ப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ந்தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்து விழிப்புணர்வு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. புகையிலையினால் ஏற்படும் தீமைகளை 1950-ம் ஆண்டுகளிலிருந்தே மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்து கூறி வருகின்றனர். ஆனாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
எனவே தான் உலக சுகாதார நிறுவனம் புகையிலை எதிர்ப்பு தினத்தை அறிவித்தது. நாம்தான் புகைபிடிப்பதில்லையே நமக்கென்ன என நினைக்கலாம். ஆனால் புகைக்காமல் புகைக்கிறோம். எப்படி தெரியுமா? புகைபிடிப்பவர்களின் புகையில் மூன்றில் ஒருபங்கு காற்றில் கலந்து அதை சிறியவர் முதல் பெரியவர் வரை சுவாசிக்கும்போது புகை நம்மையும் சேர்த்தே பாதிக்கிறது. இந்த அபாயநிலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.
எல்லோரும் பிறக்கும்போது நல்லவர்கள் தான் ஆனால் வளரும் போதுதான் இதுபோன்ற புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். புகை பிடித்தலுக்கான காரணத்தை சிலர் மகிழ்ச்சிக்காக என்றும், சிலர் மனஅழுத்தத்திற்காக எனவும் பலரும் பல காரணங்களை கூறினாலும் புகை நமக்கு பகையே என்பதை நாம் அறிய வேண்டும்.
தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளில் வயதுவந்தவருக்கு மட்டுமே கடைகளில் சிகரெட் விற்கப்படுகிறது. அதற்கான கடுமையான சட்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஓரளவு சட்டம் இருந்தாலும் வியாபாரிகள் வருமானத்தை தான் பார்க்கிறார்கள். வருமானம்கூட நியாயமான வருமானமாக இருக்க வேண்டும் என உணரவேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.