தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் !தமிழர் திருநாள் தைத்திருநாள் ………..
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் ,தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாக தை விளங்குகிறது .
இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது. விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அந்த விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாய் உணவிலும் – இந்த மண்ணிற்கும் நமக்கும், இந்த விவசாயத்திற்கும் நமக்கும், இருக்கும் தொடர்பை நாம் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கத் தவறி வருகிறோம், அது அரிதாகிக் கொண்டே வருகிறது.
அறுவடைத் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இந்த தொடர்பை நாம் இழந்துவிடக் கூடாது என்பதை நாம் ஆணித்தரமாக உணர்வதற்குத்தான். செய்தித் தாளில் வரும் செய்தியை பார்த்துவிட்டு விவசாயிக்கு நினைவு மட்டுமே செலுத்தும் துர்பாக்கிய நிலைக்கு நாம் சென்றுவிட்டோம். விவசாயம் என்னும் செயலுக்கும் பல விலங்குகளுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. நாம் உண்ணும் உணவிற்கு, நாம் உழும் மண்ணிற்கு சத்தூட்ட வேண்டுமென்றால் அதில் விலங்குகளின் பங்கு மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும்.
இதனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆழமான பந்தம் உண்டு. இவ்விலங்குகள் இல்லாமல் நாம் வாழ முடியாது. ஆனால் நாம் இல்லாமல் அவர்களால் சிறப்பாகவே வாழ இயலும். நாம் இவ்வுலகில் இருக்கும் விதமே நம் நன்றியை அவர்களுக்கு வெளிப்படுத்தும் தினமாக இருக்க வேண்டும். நம் நாட்டில், நம் இயல்பு வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விழாவை நாம் உருவாக்கினோம். அதனுடன் அதற்கு உண்டான ஆட்டத்தையும் பாட்டத்தையும் இணைத்தோம். வாழ்கையே கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு இது.
ஒரு காலத்தில், உழவு செய்வதற்கொரு பாட்டு, ஆட்டம், வழிபடுவதற்கு சில பூஜை முறைகள் என்று அமைத்து வைத்தார்கள். சரி, நாளைக்கு காளை வாங்க வேண்டுமா? அதற்கொரு கொண்டாட்டம், அதற்கொரு பாட்டு என்று வழி செய்து கொடுத்தார்கள். விதை விதைத்தால் அதற்கொரு பாட்டு, அறுவடை செய்தால் மற்றொரு பாட்டு இப்படி தினசரி வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கொண்டாட்டத்தை அமைத்தார்கள். இவையெல்லாம், வெறும் கேளிக்கைகளாய் மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள கொண்டாட்டங்களாய் உருவாக்கப்பட்டன.
இவை தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மூலமாக இருககும்படி செய்தனர். நாம் செய்யும் செயல் சிறப்பாக நடைபெற வேண்டும், அதே சமயத்தில் அதனை ஆனந்தத்துடன் செய்ய வேண்டும் என்கிற ஆழ்ந்த அக்கறை ஒவ்வொன்றிலும் தொனித்தது. அதனால் ஒர் ஆண்டின் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும் திருவிழாக்களாகவே இருந்தன. வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகவே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் இந்தப் பொங்கல் திருநாள் மிக முக்கியமானது. இந்த நன்னாளில் புது உலகம் படைக்க நாம் முயல வேண்டும். ஏதோ ஒரு பண்டிகைக் காலம் வரும்போது மட்டும் நாம் இப்படி இருப்பதல்ல, ஒவ்வொரு நாளும் இப்படிக் கொண்டாட்டமாகவே இருக்க வேண்டும்.
சமீபத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற செய்தி படுவேகமாக பரவியது. இதையே சாக்காக வைத்து நாம் புது உலகம் படைப்போம். அப்படிப் பார்த்தால் இதுப் புதுப் பொங்கல், முதலாவது பொங்கல். புது உலகில் அடியெடுத்து வைத்திருக்கும் நமக்கு இந்தப் பொங்கல் திருநாள் மிக முக்கியமானது.
source: dinasuvadu.com