தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. அது மாத்திரம் அல்லாமல், இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது.
இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
ஆனால் சீனா அதில் செயற்கை தீவுகளை அமைத்து, அதை ராணுவமயமாக்கி வருவதாக பரவலாக ஒரு சர்ச்சை உள்ளது. சமீபத்தில் அங்கு உள்ள பராசல் தீவின் அங்கமான ஊடி தீவில் சீனா கனரக போர் விமானங்களை நிறுத்தியது. இதை சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஒரு மாநாட்டில் பேசினார். அதில் அவர் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
தென் சீனக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகள், மின்கருவிகளை செயலிழக்க செய்கிற ஜாமர் கருவிகளை சீனா ஏராளமாக நிறுத்தி வைத்து உள்ளது.
இவற்றை சீனா நிறுத்தி வைத்து இருப்பதின் நோக்கம், அண்டை நாடுகளை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்தான்.
சீனாவின் நடவடிக்கைகள் அதன் பரந்த நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
சீனாவுடன் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான உறவைப் பராமரிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் அந்த நாட்டுடன் தீவிரமாக போட்டியிடுவோம். இந்த பிராந்தியத்தில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளை ராணுவ மயமாக்க மாட்டோம் என்று 2015-ம் ஆண்டு, சீன அதிபர் ஜின்பிங் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றத்தவறி விட்டது என்றும் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சாடினார்.
இந்த மாநாட்டில் ஜேம்ஸ் மேட்டிஸ் பேசும்போது, டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூரில் 12-ந் தேதி சந்தித்து நடத்த உள்ள பேச்சு வார்த்தையில் தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்தி உள்ள விவகாரம் இடம் பெறாது. (தென் கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரத்து 500 துருப்புகளை நிறுத்தி வைத்து இருக்கிறது). கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்” என்று குறிப்பிட்டார்.