துறைமுகத்தை மீட்க உச்சகட்ட தாக்குதல்! ஏமன் நாட்டில் பரபரப்பு.! ஐ.நா. கவலை..!
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக, சமீபகாலமாக இந்த தாக்குதல் வீரியம் அடைந்துள்ளது. அல்-துர்யாமி பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்பு மோதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஹொடைடா மாகாணத்தில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இந்த உள்நாட்டுப் போரால் கொல்லப்படலாம் என
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதேபோல், ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல் வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் இதை கைப்பற்றியே தீர வேண்டும் என ஏமன் அரசு கருதுகிறது.
இதற்கிடையில், ஹொடைடா துறைமுகத்தை ஹவுத்திப் போராளிகள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏமன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தர் மார்ட்டின் கிர்ஃபித்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். தங்களது போராயுதங்களை ஹவுத்தி படையினர் கைவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்பினால் அவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்னும் வரைவு ஒப்பந்தத்துடன் அவர் ஹவுத்தி இன தலைவர்களுடன் சமரசம் பேசி வருகிறார்.