துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா…
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
15 முதல் 18 வயதுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. இதன், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் களம் கண்டார்.
ஆரம்பம் முதலே இலக்கை நோக்கி துல்லியமாக குறி வைத்து சுட்டு, இவர் தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில், 236.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். அத்துடன், இளையோர் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.
இது துப்பாக்கி சுடுதலில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது பதக்கம். இதற்கு முன் ஷாகு மேன் மற்றும் மெஹுலி கோஷ் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 10 மீட்டர் ரைஃபெல் போட்டியில் வெள்ளி வென்றனர்.
இவர் ஏற்கனவே உலகக்கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். நடப்புத் தொடரில் முன்னதாக இந்தியாவின் ஜெரேமி பளுதூக்குதலில் தங்கம் வென்றார். இதன் மூலம், இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
DINASUVADU