தித்திக்கும் தீப ஒளி திருநாள்…பல வடிவங்களில் கொண்டாட்டம்..!!
திரும்பிய திசைகளெல்லாம் கண்களுக்கு விருந்தாய் கலர் கலரான வாணவேடிக்கை. செவிகளுக்குள் புகுந்து வெளியேறும் ‘டமால், டுமீல்’ பட்டாசு சப்தம். நாசியை தழுவிச் செல்லும் கந்தக மணம். உடலை அணைத்திருக்கும் புத்தம்புது ஆடை. வாய் நிறையும் இனிப்பு. மனம் கொள்ளா மகிழ்ச்சி. இவைகள் அனைத்தும் ஒரே நாளில் சாத்தியம் என்றால் அது தீபாவளி திருநாளில் மட்டுமே.
இன்றைய தினம், எவ்வளவுதான் கவலைகளும் கஷ்டங்களும் இருந்தாலும் அவற்றையெல்லாம் தூக்கி தூர வைத்துவிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து கோடித்துணி உடுத்தி கோவில்களுக்கு செல்கிறோம். உறவுகளை சந்திக்கிறோம். இதன்மூலம் மனமும் உடலும் புத்துணர்வுக்கு ஆளாகிறது.
தீபாவளி அன்று இருளைப்போக்கும் தீபங்கள் ஏற்றுவதன் தாத்பர்யம், நம் மனம் முழுதும் நிரம்பியிருக்கும் அனைத்து தீய எண்ணங்களையும் அழித்து நல்ல எண்ணங்களை நிரப்புவதே ஆகும்.
நாம் ஏற்றும் அகல் விளக்கிற்கே அழகிய விளக்கம் கொடுக்கிறார்கள் பெரியவர்கள். அகல் விளக்கு மனித உடலை குறிக்கிறது. இரண்டுமே பஞ்சபூதங்களால் ஆனது. மேலும் அழியக்கூடிய தன்மை கொண்டது. விளக்கின் சுடர் ஆன்மாவை சுட்டிக்காட்டுகிறது. இது இறைவனோடு தொடர்பு கொண்டால் இன்னும் பிரகாசமாக இருக்கும். எண்ணையே ஆன்மிக ஞானம்; தீபச்சுடர் அழகாக எரிய இதுவே காரணம். அனைவரும் அறியாமையாகிய இருளை விட்டு வெளியே வர தீப ஒளியாகிய ஆன்மா வழிகாட்டுகிறது.
இப்படிப்பட்ட செய்தி காலம் காலமாய் சொல்லப்பட்டது வருகிறது.
நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுவது தீபாவளி – இதுதான் தென்னிந்தியாவில் சொல்லப்படும் புராணக்கதை. ஆனால் வட இந்தியாவிலோ, ராமர் ராவணனை அழித்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய நன்நாளே இந்நாள் என நம்பப்படுகிறது. இந்த இரண்டிலும் சேராமல் மேற்குப் பகுதியை சேர்ந்த மக்கள், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து பாலி என்கிற அசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுவதே இத்திருநாள் என்கிறார்கள்.
விக்கிரமாதித்தன் உஜ்ஜயினியில் அரியணை ஏறி முடிசூட்டிக்கொண்ட நாள் இதுவே என்று நம்பும் மக்களும் உண்டு.
இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்களும், சீக்கியர்களும் தீபாவளியில் பங்குபெறுகிறார்கள். பொற்கோயிலின் கட்டுமானப்பணிகள் 1577ல் இத்தினத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதையே தீபாவளி திருநாளாக சீக்கியர்களும், மகாவீரர் நிர்வாணம் அடைந்ததை நினைவுகூறும் விதமாகவும் சமணர்களும் கொண்டாடுகிறார்கள்.
ராஜஸ்தானில் இன்றைக்கு பூனையை மகாலட்சுமியாக பாவித்து உணவு படைக்கிறார்கள். அந்த உணவு முழுதுமாக பூனை உண்டுவிட்டால் நல்ல சகுனமாக நினைக்கிறார்கள்.
குஜராத்தில் ‘பதவ்சார்’ என அழைக்கப்படுகிறது தீபாவளி. இந்நாளில் உப்பு வாங்குவதை, இம்மாநில மக்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள்.
பீகார் ஆதிவாசிகள் இத்தினத்தன்று காளிக்கு விசேஷ பூஜைகள் செய்து வணங்குகிறார்கள். சோட்டா நாக்பூரில் வசிக்கும் ஆண்கள் கூடை நிறைய நெல்லையும் புல்லையும் எடுத்துக்கொண்டு தங்கள் கிராமங்களை சுற்றிவருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் தீபாவளி அன்று எமனை வணங்குகிறார்கள்.
கொல்கத்தாவில் ‘மகாநிஷா’ என்கிற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தான் 64000 யோகினிகளுடன் மகா காளி தோன்றியதாக நம்பப்படுகிறது.
இவைகளெல்லாம் நம் நாட்டுக்குள் நடக்கும் சங்கதிகள். இனி கொஞ்சமாய் கடல் கடந்து வெளிநாடுகளில் எப்படி என்பதை எட்டிப்பார்த்து வருவோம்.
வெளிநாட்டில் தீபாவளி
மொரீஷியஸில், ராமரின் முடிசூட்டு விழாவிற்கு முன்பிருந்தே இவ்விழா கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது. இந்நாட்டு மக்கள் நம்மைப் போலவே பட்டாசு வெடிக்கிறார்கள். தீபங்கள் ஏற்றுகிறார்கள். மகாலட்சுமியை வணங்குகிறார்கள்.
‘கிரிவோங்’ என்கிற பெயரில் தாய்லாந்து மக்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இவ்விழாவிற்கான மாதம் மட்டுமே இங்கு மாறுபடுகிறது. அக்டோபருக்கும் நவம்பருக்கும் இடையே இவ்விழா இங்கு வருகிறது. வாழை இலையில் விளக்குகள் செய்து அதில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. மற்றபடி நம்மைப்போலவே இனிப்புகள் வழங்கி ஆர்ப்பரிக்கிறார்கள்.
நேபாளத்தில் ‘திகார்’ என அழைக்கப்படுகிறது தீபாவளி. ஐந்து நாட்கள் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட நம் இந்திய மக்களால் நம்பப்படும் அதே புராணக்கதைகள் இங்கேயும் உண்டு.
இலங்கையிலும் இவ்விழாவை சிறப்பாகவே நடத்துகிறார்கள். தீபங்களையும் ஏற்றுகிறார்கள். என்ன…! நாம் இனிப்பு செய்து சாப்பிடுகிறோம். அவர்களோ அதற்கு பதிலாக சர்க்கரையை சாப்பிடுகிறார்கள். அவ்வளவே வித்தியாசம்.
ஜப்பானியர்கள் செப்டம்பர் மாதத்தில் தீபாவளியை வரவேற்கிறார்கள். நம்மைப்போலவே இங்கும் கொண்டாட்டம் உண்டு.
இதுமட்டுமில்லாமல் பல நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இவர்களெல்லாம் நம்மிலிருந்து சற்று மாறுபடுகிறார்களே தவிர கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது.
தீபஒளி திருநாளன்று சூரியன் விழிக்கும் முன்பாகவே நாம் எழுந்து, கங்கா தேவியை நினைத்து குளியலை முடிக்க வேண்டும். அன்றைய தினம் மட்டும் கங்கையை நினைப்பதாலேயே, அதில் நீராடிய பலன் கிடைப்பதாக புராணங்கள் சொல்லுகின்றன. நாமும் நம்புவோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.
dinasuvadu.com