திட்டமிட்ட படியே 12ம் தேதி ட்ரம்ப் – கிங் ஜங்க் சந்திப்பு..!
வடகொரியாவுடன் எதிர்பார்த்தபடியே வரும் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்காவும், வடகொரியாவும் தற்போது பூர்வாங்க பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளன. முதலில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்ட நிலையில் அமெரிக்க, தென் கொரிய கடற்படை கூட்டுப் பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்து பேச்சுவார்த்தை நிறுத்தப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜோன், தனது கடுமையை தளர்த்தி பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார். அதன்படி வரும் 12ம் தேதி இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
இதனை முன்னிட்டு வடகொரியாவின் துணைத் தலைவரான கிம் யாங் சோல் ((Kim Yong Chol)) அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்ற அவரை அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசினார்.
அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் வழங்கிய கடிதத்தை டிரம்பிடம் அவர் வழங்கினார். கடந்த 18 ஆண்டுகளில் வடகொரிய தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோனை சந்தித்துப் பேசுவது உறுதி என்றும், அப்போது அவரிடம் நிறைய பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.