தமிழ் தலைவாஸ் அணி பரிதாபம் : அடுத்தடுத்து மூன்று தோல்வி ..!!
6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
‘பி’ பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 8-9 என்று இருந்த போது வரை மட்டுமே சற்று தாக்குப்பிடித்து ஆடுவது போல் தெரிந்தது.
பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் தனி வீரராக தமிழ் தலைவாசை சூறையாடினார். தொடக்கத்தில் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுத்த அவர் முதல்பாதி ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருந்த போது ஒரே ரைடில் தமிழ் தலைவாசின் 5 வீரர்களை காலி செய்தார். இதனால் பெங்களூரு அணியின் புள்ளி எண்ணிக்கை கிடுகிடுவென எகிறியது. முதல் பாதியில் அவர்கள் 28-12 என்ற புள்ளி கணக்கில் மிக வலுவான முன்னிலை பெற்றனர்.
இதனால் பிற்பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடினார். வழக்கம் போல் 2-வது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் கடும் போராட்டம் கொடுத்தாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.
முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் ரைடு மூலம் மட்டும் 20 புள்ளிகளை அள்ளினார். தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் 19 புள்ளிகள் சேர்த்தார்.தொடக்க ஆட்டத்தில் பாட்னா பைரட்சை வென்ற தமிழ் தலைவாஸ் அணி, அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளிடம் மண்ணை கவ்வியிருந்தது.
DINASUVADU