தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது….!!
மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த திட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என மாநில அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த செயல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை, மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. தீர்மானத்தின் நகலை அ.தி.மு.க. எம்.பிக்கள் மூலம் மத்திய அரசிடம் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
DINASUVADU.COM