தமிழக காங்கிரஸ் தலைவர் நீக்கமா? : EVKS இளங்கோவனுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு…!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் EVKS இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு 4 மாதங்கள் கழித்து 2016 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி திருநாவுக்கரசர் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் திருநாவுக்கரசர் தலைவரானதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக இளங்கோவன் மற்றும் ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசருக்கு போட்டியாக இயங்கி வந்தனர்.
இருதரப்பினரும் அறிக்கை அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் நீக்கப்படலாம் என அடிக்கடி செய்திகள் கசிந்தன. வட இந்தியாவில் 5 மாநில தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் இளங்கோவனுக்கு உடனடியாக அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இளங்கோவன் டெல்லி சென்றிருப்பது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
dinasuvadu.com