தங்கத்தால் கேரளாவுக்கு உதவி செய்த 12 வயது மாணவி…!!
ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்!
துபாயில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு ஒரே பிரசவத்தின் போது, வர்னிகா, தியூதி, பிரணதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது வயது 12 ஆகிறது. அனைவரும் துபாயில் உள்ள டெல்லி பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மகள்களின் 12வது பிறந்தநாளை முன்னிட்டு அரைகிலோ தங்கத்தால் செய்யப்பட்ட கேக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
ஸ்பெஷலாக செய்யப்பட்ட கேக்:
துபாய் அல் பர்சாவில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக், 22 கேரட் ஆபரணத் தங்கத்தால் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மதிப்பு ரூ.19 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள மலர் வடிவம் துருக்கி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதை விவேக் கல்லிதிலின் மகள் பிரணதி அறிந்து கொண்டார். தொடர்ந்து மற்றவர்களுடன் பேசியதையடுத்து, தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை நிவாரண பொருளாக வழங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து விவேக்கிடமும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் மற்ற சகோதரிகளுடன் பேசி, பிறந்த நாள் பரிசாக தந்தை கொடுத்த ‘தங்க கேக்’கை நிவாரண பொருளாக வழங்க முடிவு செய்து தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து, மகளின் ஆர்வத்தை பார்த்து வியந்த விவேக், அந்த தங்க கேக்கை பணமாக மாற்றி கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து பிரணதி கூறுகையில், எனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் குடும்பத்தினர் கேரளா வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் வீடுகளின் கூரைகளில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எங்களது பிறந்தநாளை விட அவர்களின் வாழ்க்கை தான் எனக்கு பெரிதாக தோன்றியது. இதனால், எங்களுக்கு கொண்டு வரப்பட்ட கேக்கை அவர்களுக்கு கொடுத்துள்ளோம். எங்கள் வீட்டு அலமாறியில் இருப்பதை விட பல ஆயிரம் பேரது கண்ணீரை துடைக்க பயன்பட்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…