ட்ரம்ப்-கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து..!!
உலகமே எதிர்பார்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்கா- வடகொரியா அதிபர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
65 ஆண்டுகால கொரிய போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் அறியாமையிலும், முட்டாள்தனமாகவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியது. இதற்கு பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த மைக்பென்ஸ், பேச்சுவார்த்தை விவகாரத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் ஏதேனும் விளையாட நினைத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றும் வடகொரிய அதிபர் லிபியாவின் கடாஃபியைப் போன்று கொல்லப்படுவார் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சான் ஹுய் ((Choe Son Hui)) தனது அறிக்கையில் மைக் பென்ஸ் சுய கட்டுப்பாடின்றி ஆணவமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
பேச்சுவார்த்தைக்காக தாங்கள் அமெரிக்காவை கெஞ்சப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையை மறுபரிசீலனை செய்ய தங்கள் நாட்டுத் தலைமைக்கு பரிந்துரைக்க நேரிடும் என்று கூறியிருந்தார். அத்துடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தங்களின் அணு பலத்தைக் காட்ட நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா – வட கொரியா அதிபர்கள் சந்திப்பை கைவிடுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு எழுதிய கடிதத்தில் அவரைச் சந்திக்க ஆர்வத்துடன் காத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால் வடகொரியாவின் சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோதமும் தெரிவதால், இத்தகைய சூழலில் நெடுநாட்களாகத் திட்டமிட்ட சந்திப்பு நடப்பது சரியாக இருக்காது என தாம் கருதுவதாகவும் அதில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நல்லெண்ண அடிப்படையில் அணு ஆயுத சோதனைகளை கைவிட ஒப்புக் கொண்டுள்ள வடகொரியா முதற்கட்டமாக சீன எல்லையில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடத்தை சர்வதேச பத்திரிக்கையாளர் முன்னிலையில் தகர்த்து விட்டதாக சீனா செய்தி வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்