டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு : உலக நாடுகள் வரவேற்பு..!
எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்கா – வடகொரிய நாடுகளின் அதிபர்கள் நேற்று சந்தித்துக் கொண்ட சரித்திர நிகழ்வுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள், அதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பு என கடந்த சில மாதங்களில் உலகின் அமைதிக்கே பங்கம் ஏற்படும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் நேரில் சந்தித்து பேச்சு நடத்திய சரித்திர நிகழ்வு சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நேற்று அரங்கேறியது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்கப்பூர்வமான இந்த முன்னெடுப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு நேர்மறையான முன்னேற்றம் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா எப்போதும் ஆதரிப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படும்போது கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதி ஏற்படும் என இந்தியா நம்புவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு சீனாவும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது. வடகொரியா மீது சீனா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆராய உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் – கிம் இடையிலான பேச்சுவார்த்தை சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்யா, தென்கொரியா ஆகிய நாடுகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.