சென்னை மெரினா கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் மாயம்!
அலையில் சிக்கி சென்னை மெரினா கடற்கரையில் மாயமான 2 மாணவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடியும் உடல் கிடைக்கவில்லை. கடற்பகுதியின் ஆபத்து குறித்து 22 இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ள போதிலும் இளைஞர்கள் ஆபத்தை அறியாமல் சென்று உயிரிழப்பது வாடிக்கையாகிறது.
சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் மெரினா அருகே நேற்று பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் இம்ரான், பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்த நிவாஸ் ஆகிய இருவர் அலையில் சிக்கி மாயமானார்கள். தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார், கடலோர காவல்படையினர் உதவியுடன் இருவரையும் தேடி வருகின்றனர். கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் ஒரு மணி நேரமாக மெரினா கடற்கரை பகுதியில் வட்டமிட்டு தேடினர்.
காணாமல் போனவர்கள் எங்கும் தென்படாததால் காற்றின் திசையைக் கொண்டு ஆந்திர எல்லையை ஒட்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அங்கும் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் கால் நனைப்பதைத் தவிர குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஆழமான பகுதிகள் என 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டு எச்சரிக்கைப் பலகைகள் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளன. எனினும் விடுமுறை தினங்களில் இவற்றை பொருட்படுத்தாமல் கடலுக்குள் செல்லும் இளைஞர்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் கடலில் குளிப்பவர்களை தடுக்க தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.