சீன பொருட்களுக்கு ரூ.3.40 லட்சம் கோடி வரி விதிக்க அமெரிக்கா புதிய முடிவு..!

Default Image

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சீனா, தனது அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது; அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா, தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதை சீனா மறுத்து வருகிறது. இருப்பினும் இதில் இரு தரப்புக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இருப்பினும், இதன் காரணமாக தனது நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதாக கருதிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தியது.

இந்த வரி உயர்வு 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) அளவுக்கு அமைந்தது.

உடனே அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற வகையில், அங்கு இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்கள், சாதனங்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்த சீனாவின் ஜின்பிங் நிர்வாகம் முடிவு எடுத்தது.

இதுவும் அமெரிக்கா போன்று 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) அளவுக்கு அமைந்தது.

பின்னர் இது தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் இரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.

அதையடுத்து இரு நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்கி, அந்த வரிவிதிப்பை கடந்த மாதம் நிறுத்தி வைத்தன.

இரு நாடுகளும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கையில், வர்த்தக சமனற்ற நிலையை குறைப்பதற்காக அமெரிக்க விவசாய மற்றும் எரிசக்தி பொருட்களின் கொள்முதலை சீனா அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்கள் கழித்து, தனது வரி விதிப்பு முடிவை உறுதியாக பின்பற்றப்போவதாக அமெரிக்கா கூறியது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பீஜிங்கில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் அமெரிக்கா தனது வரி விதிப்பில் உறுதியாக இருந்தால், அமெரிக்க விவசாய மற்றும் எரிசக்தி பொருட்களின் கொள்முதலை அதிகரிப்போம் என்ற உறுதியை நாங்களும் மதித்து நடக்க மாட்டோம் என சீனா நேற்று முன்தினம் கூறியது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசர் ஆகியோரை அழைத்து 90 நிமிடங்கள் விவாதித்தார்.

அதன் முடிவில் சீனப் பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி) வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மீதான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு முடிவு, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் மேலும் தீவிரமாக இது வழி வகுத்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்