“சீனாவை சிண்டும் அமெரிக்கா”சீறி பாய துடிக்கும் சீனா..!!!
சீனா பொருட்களுக்கு மேலும் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா வரி விதித்து உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் வரியை உயர்த்தி உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் முற்றுவதால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,. கடந்த ஜூன் மாதம் கனடா, மெக்சிகோ தவிர்த்த ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு 10 சதவிகிதமும், இரும்புக்கு 25 சதவிகிதமும் வரியை உயர்த்தி அறிவித்தார். அதே மாதத்தில் சீனா இறக்குமதி பொருட்களுக்கு மீண்டும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு வரியை டிரம்ப் உயர்த்தினார்.
பதிலடி கொடுக்க சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இருமுறை உயர்த்தியது. இந்நிலையில் சீனா இறக்குமதி பொருட்கள் மீதான வரியை செவ்வாய்கிழமை அன்று மேலும் உயர்த்தி டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பின் படி இணைய தொழில் நுட்ப பொருட்கள், மின்னணு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கடல் உணவு, மரச்சாமன்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சைக்கிள்கள், கார் இருக்கைகள் ஆகியவை உள்ளிட்ட சீன இறக்குமதி பொருட்களுக்கான வரி வருகிற 24-ஆம் தேதி முதல் பத்து சதவிகிதமும், ஜனவரி மாதம் முதல் 25 சதவிகிதமும் உயர்த்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன் மூலம் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தி உள்ளது. இதற்கு சீனா பதிலடி கொடுத்தால் அடுத்த கட்டமாக 16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி உயர்வு நடவடிக்கை இருதரப்பு வர்த்தக உறவில் விஷத்தை ஊற்றி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் சங் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவுக்கான அமெரிக்கா வர்த்தக உறவுக்குழுத் தலைவர் ஸ்டீபன் ஓர்லியன்ஸ் கண்டித்து உள்ளார். டிரம்பின் தலைமையிலான அரசு தவறான முடிவுகளை எடுத்து வருவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகர்களும் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சீனா பொருட்களின் மீதான வரி உயர்வு நுகர்வோரையே பாதிக்கும் என்றும், அமெரிக்க மக்களே பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு வரியை உயர்த்துவதாக சீனா அறிவித்துள்ளது.
இப்படி இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபடும் நிலையில் இந்தியாவின் பங்கு சந்தைகளில் சரிவு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். டிரம்ப் வரியை உயர்த்த நிலையில் செவ்வாய்கிழமை அன்று சென்செக்ஸ் 294 புள்ளிகளும், நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்தது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பொருளாதார நிபுணர்கள், அன்னிய நேரடி முதலீடும் குறையும் என்றும், இதன் மூலம் இந்திய வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதே நேரத்தில் இந்தியாவுக்கு சில லாபங்களும் உண்டு என்று அவர்கள் கூறியுள்ளனர். 24.1 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவில் இருந்து அமெரிக்கா ஜவளி இறக்குமதி செய்யும் நிலையில், இந்த துறையில் இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதே போல ரெடிமேடு துணிகள், நகைகள், நகைகளுக்கான கற்கள் ஆகியவற்றை அமெரிக்காவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்து லாபம் பார்க்க முடியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
DINASUVADU