சீனாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த விண்வெளி நிலையம் பசிபிக் கடலில் விழுந்தது.!
சீனாவின் டியான்காங்-1 விண்வெளி ஓடம், பசிபிக் கடலில் விழுந்தது.
சீனாவால் கைவிடப்பட்ட டியாங்காங்-1 எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையம், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.
சொர்க்கத்தின் அரண்மனை என பெயரிடப்பட்ட டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு முதல், சீனா விண்வெளியில் பராமரித்து வந்தது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதன் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால், அதை கைவிடுவதாக சீனா அறிவித்த நிலையில், இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கெனவே வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
இந்த ஆய்வு நிலையம், வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து சிதைந்து விடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சிதைவுகளும், நியூசிலாந்து, அமெரிக்காவுக்கு இடையிலான கடற்பரப்பிலேயே விழும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் டியான்காங்-1 விண்வெளி ஓடம், பசிபிக் கடலில் விழுந்து சிதைந்தது.இது பசிபிக் கடலின் திகித்தி தீவின் அருகே விழுந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.