சிரியாவில் அரசு படைகளின் வான்தாக்குதல்.! 16 பேர் பலி! ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை..!
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இந்த மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதலை அரங்கேற்றின. சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த கொடூர தாக்குதலில் ஒரு இளம்பெண் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 8-ந் தேதி இந்த மாகாணத்தில் ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
சிரிய அரசு படைகளின் இந்த வான்தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளார். இட்லிப் மாகாணம் போர் நிறுத்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு உறுதியேற்றவர்கள், தங்கள் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.