சாலை விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம்–முதலமைச்சர் உத்தரவு…

Default Image

சாலை விபத்தில் உயிரிழந்த 5பேர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், ஆனமலைக்குன்றுகள் கிராமம், மாவடப்பு என்ற மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 12 நபர்களும் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குருமலை என்ற மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் என மொத்தம் 18 நபர்கள் 10.10.2018 அன்று பொள்ளாச்சி வட்டம், கோட்டூரிலுள்ள சந்தையிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, டெம்போ வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, காடம்பாறை வளைவு மற்றும் காடம்பாறைக்கு இடையில், மரப்பாலம் அருகில் அவர்கள் வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மனைவி செல்வி, சுப்பிரமணி என்பவரின் மகன் வெள்ளையன், ஜிப்பிதிருமன் என்பவரின் மகன் நல்லப்பன், பழனி என்பவரின் மகன் தருமன் மற்றும் காளி என்பவரின் மகன் தன்னாசி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் 12 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்