சாதி அரசியலால் விஸ்வரூபம் எடுத்த கர்நாடகா தேர்தல்!சித்தராமையா தோல்விக்கு என்ன காரணம்?
சாதியால் இந்திய அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்றால், கர்நாடக அரசியல் சாதியாலே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வட கர்நாடகா, தென் கர்நாடகா, மத்திய கர்நாடகா, மும்பை கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா, பழைய மைசூரு மாகாணம், மெட்ராஸ் மாகாண பகுதிகள், பெங்களூரு என கர்நாடகாவின் அத்தனை பிராந்தியங்களிலும் சாதி ஆழமாக வேரூன்றி கிளைப்பரப்பி வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மடம், ஒரு தலைவர், ஒரு கட்சி, பல சங்கங்கள், பொருளாதார ஸ்தாபனங்கள் என கர்நாடக அரசியலில் சாதி அமைப்பு மிகவும் காத்திரமாக இயங்குகிறது.
பாஜக லிங்காயத் வகுப்பை சேர்ந்த எடியூரப்பாவையும், மஜத ஒக்கலிகர் வகுப்பை சேர்ந்த குமாரசாமியையும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தின. இதனால் குருபர் வகுப்பை சேர்ந்த சித்தராமையா தனது பழைய ‘அஹிந்தா’ (தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தோர் கூட்டமைப்பு) அஸ்திரத்தை கையிலெடுத்தார். இதன் மூலம் தலித், இஸ்லாமியர், குருபர்,பழங்குடியினர், கிறிஸ்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு 60% வாக்குகள் இருக்கின்றன. இதில் 40%வாக்குகள் கிடைத்தாலே தான் மீண்டும் முதல்வராகிவிடலாம் என கணக்கு போட்டார்.
சித்தராமையாவின் தவறுகள்:
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் எதிர்க்கட்சியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்த சித்தராமையா, அடுத்தடுத்த நாட்களில் தவறுக்கு மேல் தவறு செய்ய ஆரம்பித்தார். மூத்த தலைவர்களை மீறி இரு தொகுதிகளில் போட்டியிட்டது, மருத்துவராக இருந்த மகனை வருணா தொகுதியில் களமிறக்கியது, பிறகட்சியில் இருந்து வந்த தன் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்தது, குற்றப் புகாரில் சிக்கிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது என சித்தராமையா, ‘தான்’ என்கிற அகங்காரத்தில் செயல்பட்டார். இதனால் மல்லிகார்ஜூன கார்கே, பரமேஷ்வர், டி.கே.சிவகுமார் போன்ற தலைவர்கள் அவரிடம் இருந்து விலகினர்.
இன்னொரு பக்கம் தென் கர்நாடகாவில் பலமாக இருக்கும் ஒக்கலிகர், தலித் வகுப்பினரின் தலைவர்களை தக்க வைத்துக்கொள்ள தவறினார். சித்தராமையாவின் ஏதேச்சதிகார அணுகுமுறையால் காங்கிரஸில் இருந்த மூத்த ஒக்கலிகர் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஆண்டே பாஜகவுக்கு தாவினார். அவரை தொடர்ந்து தலித் தலைவர் சீனிவாச பிரசாத்தும் பாஜகவுக்கு போனார். சித்தராமையாவால் ஓரங்கட்டப்பட்ட நடிகர் அம்பரீஷ், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சித்தராமையாவை தொலைபேசியில் திட்டிவிட்டு குமாரசாமி வீட்டுக்குப் போனார்.
இதன் விளைவாக மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் பெரிய அடியை வாங்கி இருக்கிறது. சித்தராமையா 5 முறை வென்ற சாமுண்டீஸ்வரி தொகுதியிலே தோல்வி அடைந்திருக்கிறார். இந்த பகுதிகளில் கடந்த தேர்தலில் 18 இடங்களை பிடித்த காங்கிரஸ், இந்த முறை 10-க்கும் குறைவான இடங்களை பிடித்திருக்கிறது. பாஜகவுக்கு ஆளே இல்லாத பகுதி என சொல்லப்பட்ட பகுதியில், 8 இடங்கள் கிடைத்திருக்கிறது. அதே வேளையில் 25 இடங்களில் முந்தி, ஒக்கலிகர்களின் தனிப்பெரும் தலைவராக தேவகவுடா மீண்டும் உருவெடுத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஒக்கலிகர்களின் வாக்கு வங்கியை மட்டும் நம்பி எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருந்தார் குமாரசாமி. தலித்துகளின் வாக்குகளை கணக்குப் போட்டு முதல்முறையாக மாயாவதியுடன் தேவகவுடா கைகோத்தார். இதன் மூலம் தென்கர்நாடக கட்சியாக இருந்த மஜத, மாநிலம் தழுவிய கட்சியாக மாறியுள்ளது. ஒக்கலிகர்களின் வாக்குகளோடு தலித் வாக்குகளும் சேர்ந்ததால் பல இடங்களில் மஜதவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
லிங்காயத் ஆதரவு இல்லை:
சித்தராமையா பெரிதும் எதிர்பார்த்த லிங்காயத் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. காலங்காலமாக ஆதி சைவர்களோடு இந்துக்களாகவே வாழ்ந்து பழகிவிட்ட லிங்காயத்துகளை தேர்தல் நெருங்கிய வேளையில் தனி மதமாக சித்தராமையா அங்கீகரித்தார். ‘இந்து மதத்தை பிளவுபடுத்திவிட்டார் சித்தராமையா’ என்ற கோஷத்தை அமித் ஷா மாநிலம் முழுவதும் கொண்டுபோனார். லிங்காயத் உணர்வில்லாமல் இருந்தவர்கள் கூட, வேறு சாதியை சேர்ந்த சித்தராமையா எங்களை ஏன் பிரிக்க வேண்டும்? என கேள்வி கேட்க தொடங்கினர். இந்த கேள்வி தேர்தலில் பலமாக ஒலித்திருக்கிறது. இந்த தவறை செய்ததன் மூலம் சித்தராமயைா சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார்.
கடந்த தேர்தலில் லிங்காயத்துகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 47 இடங்களை பிடித்த காங்கிரஸ் இப்போது 20-க்கும் குறைவான இடங்களே பிடித்திருக்கிறது. எடியூரப்பாவை எதிர்த்த லிங்காயத்துகள்கூட, சித்தராமையா மீதான கோபத்தால் பாஜகவுக்கு வாக்களித்தனர். சித்தராமையா எடுத்த தவறான முடிவு அவர் தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ள காரணமாகிவிட்டது. லிங்காயத்துகளின் ஒற்றை தலைவர் என்ற அடையாளத்தை எடியூரப்பா மீட்டெடுத்திருக்கிறார். லிங்காயத்துகளின் வாக்குகளுடன் வட கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகாவில் வாழும் தெலுங்கர்களின் வாக்குகள் ரெட்டி சகோதரர்கள் மூலம் பாஜகவுக்கு வந்தது. இதனால் காங்கிரஸ்,மஜதவை வீழ்த்தி பாஜக அந்த பகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக மாறி இருக்கிறது. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டாலும்கூட, கர்நாடக தேர்தலில் சாதி அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கான பொறுப்பை எந்தக் கட்சியும் தட்டிக் கழிக்க முடியாது!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.