காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 19பேர் கைது..!
உத்தரப்பிரதேசத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அம்மாநிலத்தில் 42 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 800க்கும் மேற்பட்ட மைங்களில் நடைபெற்றது.
24 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில், காவல்துறையினர் நடத்திய சோதனையில் தொழில்நுட்ப உதவியுடன் மோசடி செய்த கும்பல் சிக்கியிருக்கிறது. கோரக்பூரில் 11 பேரும், அலகாபாத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
உண்மையான தேர்வர்களுக்கு பதில், போலி ஆவணங்கள் உதவியுடன் இவர்கள் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. வினாத்தாளை புகைப்படம் எடுத்து வேறு சிலருக்கு அனுப்பி வைத்ததுடன், ரகசிய மைக் மூலம் அவர்கள் அளிக்கும் பதில்களை பெற்று எழுதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒரு தேர்வருக்கு 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.