கபாடி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ..!
இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் சமீபத்தில் தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானையும், அடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கென்யாவையும் வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது தடவையாக இன்று மோதின. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 18-9 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 23 புள்ளிகளும், பாகிஸ்தான் 8 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 41-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.