கண்ணீர் வர வைத்த கொடுமை…7 வயது சிறுமியின் பட்டினி சாவு…வைரலாகும் போட்டோ..!!
ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது. அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஏமனில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் அமல் ஹுசேன் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். சத்துக் குறைபாட்டின் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாய் மரியம் அலி, ”என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது” என்றார்.
dinasuvadu.com