கடும் புயலால் சோமாலியாவில் 15 பேர் பலி..!!உலக நாடுகளின் உதவியை நாடியது ஐ.நா..!!
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் புயல் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோமாலியா அரசு அவசரகால உதவிகளை செய்து வருகிறது.
தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் நாட்டின் பல சாலைகள் சேதம் அடைந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உடனடி நிவாரண நிதியாக சுமார் 80 மில்லியன் டாலர் தொகையை ஐநா சபை மற்றும் சோமாலியா அரசு உலக நாடுகளிடம் கேட்டு முறையிட்டுள்ளன.
ஏற்கனவே, கடும் வறட்சியால் சோமாலியா பாதிக்கப்பட்டிருந்ததால், 2018-ம் ஆண்டுக்கான நிவாரண உதவியாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் கோரியிருந்தனர். அதில், 24 சதவிகித தொகை மட்டுமே நிவாரண உதவியாக வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்