"கடுமையான உழைப்பு என்றால் அது தமிழ்நாடு தான்"குடியரசு துணைத் தலைவர் புகழாரம்..!!
கட்டுமானம், பொறியியல், ஆலைப்பணிகள், கடுமையான உழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு, தமிழ்நாடு புகழ்பெற்று விளங்குவதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
கோயம்புத்தூரில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வெங்கையா நாயுடு, தமிழ் மொழியில் தனது உரையைத் தொடங்கினார்.
கோயம்புத்தூரில், தொழில்கள், சிறந்த மருத்துவம் மட்டுமின்றி, உணவும் மிகச் சிறப்பாக இருக்கும் என்றார். நீர்நிலை ஆக்கிரமிப்பு மோசமான பழக்கம் என்று சுட்டிக்காட்டிய வெங்கையா நாயுடு, கோயம்புத்தூர் மாநகரம் சிறப்பாக இருப்பதால் தான், ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியலில் இருந்து விலகினாலும், மக்கள் சேவையிலிருந்து தாம் விலகவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் முறையாக வரி செலுத்தினால் தான், திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறை பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.