கடல்நீரை மாசுபடுத்துவதில் மிக முக்கிய பங்கை வகிப்பது இந்த சிறிய பொருள் தான்
கடல் நீர் மாசுபடுவது மிகப்பெரும் பிரச்னையாக வளர்ந்துவருகிறது. இதைத் தடுக்க, உலக நாடுகள் பலவும் பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன. கடலை மாசுபடுத்தும் பொருள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் தான். ஆனால், கடல் நீரை மாசுபடுத்துவதில் மிக முக்கிய பங்கை வகிப்பது சிகரெட் துண்டுகள் தான்.
அரசு சாரா கடல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, கடந்த 1980-ம் ஆண்டு முதல் கடலில் கலக்கும் சிகரெட் துண்டுகளைச் சேகரித்துவந்துள்ளது. தற்போது வரை, சுமார் 60 மில்லியன் துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், கடல் பரப்பில் பயன்படுத்தப்படும் சிகரெட் , ஆறுகளின்மூலம் கடலில் வந்து கலக்கும் சிகரெட் எனப் பல வழிகளில் சிகரெட் துண்டுகள் கடலில் கலக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தான் கடல் நீர் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.