கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள ஈரான் – ஈராக் ஒப்பந்தம்..!
எண்ணெய் வளம் மிக்க ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரானிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை எதிரி நாடுகளாக இருந்த இவ்விரண்டு நாடுகளும் திடீரென தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளது முக்கிய நிகழ்வாகும்.
ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கிர்குக் பகுதியில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யை ஈராக் டேங்கர் லாரிகள் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கும். அதை ஈரான், தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும். மீண்டும், ஈரான் அதே அளவிலான எண்ணெய்யை ஈராக்கின் தெற்கு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கும்.
கடந்த வருடம் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் இருந்த போராளிகளை விரட்டி, ஈராக் சுதந்திரமடைய ஈரான் முக்கிய பங்காற்றியது. இதன் பின்னர், அதிகமான எண்ணெய் வளம் மிக்க ஈராக்கின் கிர்குக் பகுதியில் தங்களது வர்த்தக ஆதிக்கத்தை ஈரான் வலுப்படுத்த தொடங்கியுள்ளது.
தினம் தோறும் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரல்கள் வரை ஈராக்கில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஈரானில் தெற்கு பிராந்தியமான டராஹ் ஷாஹ்ர் பகுதிக்கு சென்றடையும். காலப்போக்கில் இரு நாடுகளுக்கு இடையில் குழாய் பதித்து எண்ணெய்யை கொண்டு செல்லவும் இவ்விரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி அந்நாடின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், அண்டை நாடான ஈராக்குடன், ஈரான் நெருங்கி செல்வது வளைகுடா எண்ணெய் பிரதேசங்களில் அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிகத்துக்கு ஒரு போட்டியாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்