ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வில்லை என்றால் முகமது கடாபி நிலை தான் வரும் ட்ரம்ப் எச்சரிக்கை..!
அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு ட்ரம்ப் நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.
அதில் அணு ஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்முக்கு ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் ட்ரம்ப் கூறும்போது, “கடாபியின் அழிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவரை அழிக்க அங்குச் சென்றோம். ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நிலை மீண்டும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தத்துக்கு சம்மதித்து விட்டால் கிம் ஜோங் உன் சந்தோஷமாக இருப்பார்” என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பெரிது உதவின. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.