ஏமன் மெகுனு புயலால் 2 இந்தியர்கள் உயிரிழப்பு..!!மேலும் 12 பேர் மாயம்..!!
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல், தீவிரப்புயலாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்தது. இது ஏமனுக்கு சொந்தமான சொக்கோட்ரா தீவை கடந்த வியாழக்கிழமை தாக்கியது. கடும் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததில், ஏமன் நாட்டவர்கள் 5 பேரும், இந்தியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் மாயமாகினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடந்தது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான சலாலாவில், மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியதுடன், இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது.
இதேபோல, தோஃபார் மாகாணத்தையும் தாக்கியது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். சலாலா விமான நிலையம், சனிக்கிழமை இரவு வரை புயலின் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இரண்டு மாகாணங்களிலும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்த 10 ஆயிரம் பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக அரசின் சார்பாக 65 முகாம்கள் அமைக்கப்பட்டன.
மெகுனு புயல் தற்போது வலுவிழந்த நிலையில், தொடர்ந்து, மீட்புப்பணிகளில் அரசு படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்