எம் ஹெச் 17:விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா தான் காரணம்..!!!
மலேசிய பயணிகள் விமானம் ஒன்று 2014-ல் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழுந்ததற்கு ரஷ்யாதான் பொறுப்பு என ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த எம் ஹெச் 17 விமானம், உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமையன்று, நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச விசாரணையானது விமானத்தை வீழ்த்திய ஏவுகணை, ரஷ்யாவின் படைக்கு சொந்தமானது என கூறியுள்ளது.
இவ்விமானம் அழிக்கப்பட்டதற்கு தனது தலையீடு எதுவுமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
“நெதர்லாந்து விசாரணையாளர்களின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்” என மாஸ்கோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக எம் ஹெச் 17 விமானம் வீழ்ந்ததற்கு தங்களது ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை என ரஷ்யா தெரிவித்திருந்தது.
ரஷ்யா மீது என்ன குற்றம் சுமத்தப்படுகிறது?
இந்த நிலையில் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளன.
சர்வதேச கூட்டுக் குழுவின் அறிக்கைப்படி, எம் எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட பக் ஏவுகணை நிறுவப்பட்டதுக்கு ரஷ்யாதான் பொறுப்பு என நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நம்புவதாக நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டெஃப் ப்லோக் தெரிவித்துள்ளார்.
”இதற்கு பொறுப்பேற்று உண்மையை நிலைநாட்டும் செயல்முறைக்கு முழுமையாக ஒத்துழைப்புத் தரவும், மேலும் எம் ஹெச் 17 விமானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றும் ப்லோக் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்