எப்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு?
லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணி கேப்டனான இவர், ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்கு ஏராளமான சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்சி, விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
ஆனால் லயனோல் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக மிகப்பெரிய கோப்பையை வாங்கிக் கொடுத்ததில்லை. இதனால் அவர் மீது எப்போதும் விமர்சனம் எழும்பிக் கொண்டே இருக்கிறது. 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
அதன்பின் இரண்டு கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. இதனால் பத்திரிகைகளை் மெஸ்சியை கேள்விக் கணையால் துளைத்து எடுத்தது. இதனால் விரக்தியடைந்த மெஸ்சி, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2016-ல் கூறினார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
தற்போது ரஷியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தில் அர்ஜென்டினா உள்ளது. ஒருவேளை அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றால், மெஸ்சி ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘உலகக் கோப்பைக்குப்பின் நான் ஓய்வு பெறுவேனா என்பது தெரியாது. நாங்கள் எப்படி விளையாடுகிறோம். தொடர் எப்படி முடிகிறது என்பதை பொறுத்து அது இருக்கும்.
நாங்கள் மூன்று இறுதிப் போட்டியிலும் தோற்றுள்ளோம். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை கண்டுகொள்ளாமல், பத்திரிகைகள் தர்மச்சங்டமான நிலைக்கு தள்ளுகின்றன. மூன்று இறுதிப் போட்டி என்பது எளிதான காரியம் அல்ல. அதை பாராட்ட வேண்டும். சாம்பியன் அணி என்பது முக்கியமானதுதான். ஆனால், அதை பெறுவது எளிதான விஷயம் அல்ல’’ என்றார்.
மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக 124 போட்டிகளில் விளையாடி 64 கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.