இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் பலி..!

Default Image
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த நான்கு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்