இளம் பாடி பில்டர்களுக்கு சவால் விடும் 81 வயது பாடி பில்டர்..!
கட்டுக்கோப்பான உடல் தோற்றம் மட்டுமின்றி எர்னெஸ்ட்டின் ஷெப்பேர்டின் வயதும் ஆச்சரியப்பட வைக்கிறது. 81 வயதாகும் இவர் இளம் பாடி பில்டர்களுக்கு சவால் விடும் வகையில் கட்டுக்கோப்பான உடல் அழகுடன் காட்சி அளிக்கிறார். தன்னுடைய 56-வது வயதில்தான் கட்டுடல் அழகு தோற்றத்திற்காக தனது உடலை மெருகேற்ற தொடங்கி இருக்கிறார். 71-வது வயதில் ‘உலகின் வயதான பெண் பாடிபில்டர்’ என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார்.
ஷெப்பேர்டு, அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியை சேர்ந்தவர். இவரை பார்ப்பவர்களெல்லாம், ‘நீங்கள் 80 வயதை கடந்துவிட்டீர்களா?’ என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள். இவருடைய உடல் தோற்றம் பலருடைய புருவங்களை வியப்பில் ஆழ்த்துகிறது. தனது கட்டுடல் அழகின் ரகசியம் குறித்து ஷெப்பேர்டு சொல்கிறார்:
‘‘நான் 56 வயது வரை என் உடல் நலன் மீது எந்த அக்கறையும் செலுத்தாமல் இருந்தேன். வேலை நெருக்கடி அதிகம் இருந்ததால் உடல் பற்றிய சிந்தனை எழவில்லை. ஒருநாள் என் சகோதரி வெல்வெட்டுடன் ஷாப்பிங் சென்றேன். அவள் நீச்சல் உடை வாங்கினாள். அதை பார்த்ததும் எனக்கும் நீச்சல் உடை அணிந்து பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதனை கண்ணாடி முன்பு அணிந்து பார்த்தபோது என் உடல் நீச்சல் உடைக்கு கச்சிதமாக பொருந்தி யிருப்பதை உணர்ந்தேன். உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் உருவானது. என் சகோதரியுடன் சேர்ந்து ‘ஏரோபிக்ஸ்’ உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கினேன். அடுத்தகட்டமாக பளு தூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டேன்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கும் சென்று பல்வேறு பயிற்சிகளை செய்தேன். அவை என் உடல் உடல் தோற்றத்திற்கு பொலிவு சேர்த்தது. நான் தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது 10 மைல் தூரம் நடக்கிறேன். ஜிம்முக்கு சென்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன். அதிகாலையிலேயே எழுந்தாலும் வயதுக்கு ஏற்ப போதுமான நேரம் தூங்கிவிடுகிறேன். தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கிறேன். மூன்று வேளை உணவை சிறிது சிறிதாக பிரித்து ஐந்தாறு தடவையாக சாப்பிடுகிறேன். 50 வருடங் களுக்கும் மேலாக எனது கணவர் கொலின்ஆரோக்கியமான உணவை தயாரிக்க உதவுகிறார்’’ என்கிறார்.