இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..! நடந்தது என்ன..?
இலங்கையில் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை வாங்க முடியாமல் தவித்து வருகிறது இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடும், பல மணி நேரங்கள் மின்வெட்டு நீடித்து வருகிறது.
தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு சில நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இருவர் உயிரிழப்பு
அந்த வகையில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்து நின்று கொண்டிருந்த இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பில் நேற்று பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் நிலையம் முன் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் திடீர் என்று அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் கண்டி நகரில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வெயிலில் காத்திருந்த முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.