இரு துருவங்களும் சந்திக்கும் இடம் இது தான்..!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புப் சிங்கப்பூரிலுள்ள கேபெல்லா ஹோட்டலில் நடக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.
இந்தச் சந்திப்பு காலை 9 மணியளவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தச் சந்திபுக்கான இடத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சென் டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் அரசின் விருந்தோம்பல் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் – கிம் இடையே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை உலக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது.