இந்தியாவிடம் அடங்கியது அமெரிக்கா….பொருளாதார தடை மிரட்டல் திடீர் மாற்றம்..!!

Default Image

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. பொருளாதார தடை விதிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது.

கடந்த 2015-ம் ஆண்டு, ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி ஆன நிலையில், அந்த ஒப்பந்தத்தால் பயன் இல்லை என்று கருத்து தெரிவித்தார். ஈரான் தனது வருவாயை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவதாகவும் நினைத்தார். எனவே, கடந்த மே மாதம், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

அத்துடன், ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளை டிரம்ப் மிரட்டினார். ஈரானின் வருவாயை குறைக்க நினைத்த அவர், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4-ந் தேதியுடன் எல்லா நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

அப்படி நிறுத்தாவிட்டால், அத்தகைய நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் ஈரானிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. பொருளாதார தடையை தவிர்க்க நினைத்த இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வருடாந்திர அளவை 2 கோடியே 26 லட்சம் டன்னில் இருந்து ஒரு கோடியே 50 லட்சம் டன்னாக குறைத்துக்கொள்வதாக உறுதி தெரிவித்தது.

மேலும், கச்சா எண்ணெய்க்கான பணத்தை, உணவு, மருந்தை தவிர வேறு தேவைகளுக்கு ஈரான் பயன் படுத்துவதை தவிர்க்க, விசேஷ கணக்கில் செலுத்தவும், பணத்தை உள்ளூர் நாணயத்தில் வழங்கவும் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கும் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது.

அதே சமயத்தில், இது தற்காலிக அனுமதிதான் என்றும், அடுத்தடுத்த மாதங்களில் மேற்கண்ட 8 நாடுகளும் இறக்குமதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய் விலை உயரக் கூடாது என்பதற்காகவும், ஈரானின் வருவாயை குறைக்கும் நோக்கத்திலும் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.இந்த அனுமதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஓரிரு நாட்களில் வெளியிடுகிறார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்