ஆளுநர் ஆய்வு செய்தால் போராட்டம் நடத்த தி.மு.க திட்டம்.
காரைக்குடி; தமிழக ஆளுநர் பன்வாரிலால் காரைக்குடியில் சென்றுள்ள நிலையில் அங்கு ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகத் திமுகவினர் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகிறார்,இந்த பட்டமளிப்பு விழா ஆனது பிற்பகல் 2மணிக்குப் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து வரும் அவர் காரைக்குடி பல்கலைக்கழக விடுதியில் தங்குகிறார். இதற்கிடையே அவர் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக திமுக நகரச் செயலாளர் குணசேகரன் வீட்டில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.