அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு! பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து வைக்கக் கூடாது!
அமெரிக்காவின் குடியேற்றத்துறைக்கு,மெக்சிகோ எல்லையில் ஊடுருவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து வைக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிடுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சான் டியாகோ (San Diego) நீதிமன்றத்தில் இதுகுறித்து காங்கோவைச் சேர்ந்த பெண் ஒருவர் முறையிட்டிருந்த மனுவில், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் நடவடிக்கையை நிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டும், அது முற்றிலுமாக கைவிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக ஊடுருவியது தொடர்பான வழக்கு முடிந்த பின்னரே, பிரித்து வைக்கப்படும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் முறையிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிபர் உத்தரவுக்குப் பின்னரும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை மீண்டும் சேர்த்து வைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, அவர்களை மீண்டும் பெற்றோருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.