அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் -வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு :தென்கொரியா பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் -வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரண்டுள்ளனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க தென்கொரியா அரசுக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையவழி (ஆன்லைன்) ஊடகங்களின் சார்பாக இரு பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.
உரிய அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள வடகொரியா நாட்டு தூதர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அந்த பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.